இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரங்கன ஹேரத், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஆசியாவில் நடைபெற உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன், நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி செப்டம்பர் 9 முதல் 13 வரை கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்தில் நடைபெறும்.
ஒரு அறிக்கையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பயிற்சியாளரான சக்லைன் முஷ்டாக் தற்காலிகப் பொறுப்பை ஏற்க முன்வந்தார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒரு பதவியை ஏற்றுக்கொள்ள அவர் விலகியதைத் தொடர்ந்து ஹேரத் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
" அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஹேரத், இந்த மாத இறுதியில் தனது தாய்நாடான இலங்கையில் நடைபெறும் இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரை அணியுடன் இருப்பார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இலங்கைக்கு எதிரான எங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் காலியில் ஹேரத் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே அந்த மைதானத்தைப் பற்றிய அவரது அறிவு விலைமதிப்பற்றதாக இருக்கும்," என்று நியூசிலாந்து கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.